--> -->

பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஒக்டோபர் 15, 2020

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்  சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் 2020 ஒக்டோபர் 17ஆம் திகதி காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதாகவும், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.