பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச முயற்சி

மே 13, 2019

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் முப்படையினரும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுவருகின்றனர். எனவே பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. அதேபோன்று நேற்றைய தினம் ஞாயிறு சமய வழிபாடுகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் எவ்வித தடங்களும் இன்றி இடம்பெற்றதாகவும் பொது மக்கள் எவ்வித அச்சமுமின்ற அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்நிகழ்வில் இராணுவ பேச்சாளரும் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களும் கலந்துகொண்டார்.

13ஆம் திகதி சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் பலரும் அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினராலோ புலனாய்வு தரப்பினராலே உறுதிப்படுத்தப்படாதவைகள் ஆகும். பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும் எந்தவொரு தகவல்களையும் நாம் தட்டிக்களிப்பதில்லை மாறாக அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி பாதுகாப்பு தரப்பினர்களுடன் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

11ம் திகதி மாலை கல்கிஸ்சை யில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளின் குழுவொன்று கைதுசெய்யப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. மாறாக, அது கல்கிஸ்சையிலுள்ள சட்டவிரோத வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொலிஸ் நடவடிக்கையாகும். வெளிநாட்டு நாணயத்தினை உள்நாட்டு நாணயமாக மாற்றிகொள்ளும் சட்டவிரோத பரிமாற்றம் தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சந்தேக நபர்களை கைது செய்யும் வகையில் இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது கல்கிஸ்சையில் ஒருவரும் கிருலப்பனை, களுத்துறை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதன்போது 2.5மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் சந்தேக நபர்களுக்கு சொந்தமான இரண்டு வாகனங்களும் பொலிசாரினால் கைப்பற்றப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நாணயத்தாள்களினது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், அது எவ்வாறு உள்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாகவும் மேலும் அது ஒரு பணமோசடி நடவடிக்கையா என்பது தொடர்பாக விசாரைகளை முன்னெடுத்தனர். இச்சம்பவத்திற்கும் பயங்கவாத குழுவினருக்கும் இடையில் யாதொரு தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார். மேலும் களுபோவில வைத்தியசாலையில் உள்ள மூன்று வைத்திய பீட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற கைதுகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெளிவு படுத்தினார்.

சிலாபம் நகரில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் முகநூலில் இடம்பெற்ற உரையாடலின் போது பதிவிடப்பட்ட விடயமே இந்த குழப்ப நிலைக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.