--> -->

கடற்படையின் மனிதாபிமான செயற்பாடுகள் விரிவாக்கம்; வெளிநாட்டு கப்பலில் பணிபுரியும் இலங்கை சிப்பந்தியை நாட்டுக்குள் தரையிறக்க ஏற்பாடு

ஏப்ரல் 06, 2020
 

எம்எஸ்சி 'மெக்னிபிக்கா' எனும் வெளிநாட்டு கப்பலில் பணிபுரிந்த இலங்கையரான அனுர பண்டார ஹேரத், கப்பலில் இருந்து தரை இறங்குவதற்கான ஏற்பாடுகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் இருந்த அவர், தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு இணங்க இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டார்.

மேலும், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடி மருத்துவ தேவை ஏற்பட்ட75 வயதான ஜேர்மனிய பிரஜையான பெண் ஒருவருக்கு மருத்துவப் பராமரிப்பு உதவி  இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்டது.

குறித்த ஜெர்மானிய பெண் உடனடியாக தரையிறக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அனுர ஹேரத், தனது பயணத்தின் போது இலங்கையில் தரை இறங்குவதற்காக, அதிகாரிகளிடம் சமூக வலைத்தளங்களின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோள், வைரலாகப் பரவி அனைவரது கவனத்தை ஈர்த்ததுடன் விவாதத்துக்குரிய தலைப்பாகவும் மாறியது.

 

குறித்த கப்பலின் இறுதி இலக்கான இத்தாலி நாட்டை நோக்கிய பயணத்தில், தொழில்நுட்ப மற்றும் எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காக இலங்கையில் உள்ள துறைமுகத்தை அடையும்போது நாட்டில் தரையிறங்கி தனது குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுபோன்ற நோய்த்தாக்கம் ஏற்படுகின்ற வேளையில் அவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் துறைமுகத்தில் சாத்தியமான வசதிகளை இலங்கை கடற்படை ஏற்கனவே ஏற்படுத்தி இருந்தது. கோரிக்கையை சாதகமாக கருத்தில் கொண்டு முடிவெடுப்பவர்களுக்கு வழிவகை செய்யும் வகையில் இலங்கை கடற்படை தனது செயற்பாடுகளை அமைத்திருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையில், கடற்படையினரால் குறித்த இலங்கையரை பாதுகாப்பாக மீட்டெடுக்க முடிந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 4.4 கடல் மைல் (09 கி.மீ) தொலைவில் இருந்த கப்பலை நோக்கி இலங்கை கடற்படையின் இரசாயனவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவு இன்று காலை அனுப்பப்பட்டதாக கடற்படை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சுமார் 2700 பணியாளர்கள் மற்றும் பயணிகளுடன் 2020 ஜனவரி 05ம் திகதி பயணம் ஆரம்பித்த இவ் வெளிநாட்டுக் கப்பல், அவுஸ்ரேலியா நோக்கி பயணிக்கும் வேளையில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கம் காரணமாக தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. குறித்த கப்பல், எந்தவொரு நாட்டினதும் துறைமுகத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்படாததால்,  கப்பல் தாய் நிறுவனம் அமைந்துள்ள இத்தாலிக்கு பயணம் செய்ய முடிவு செய்துள்ளது.

ஹேரத், தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப் படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையின் 'பூச' தனிமைப்படுத்தல் மையத்தில் 21 நாட்களுக்கு மருத்துவ மேற்பார்வையின் கீழ் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.