--> -->

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைது

ஏப்ரல் 15, 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்ததன் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தற்கொலைதாரி ஒருவருடன் ரியாஜ் பதியுதீன் தொடர்புபட்டிருந்ததாக தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் புகழ்பெற்ற ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரை ரியாஜ் பதியுதீன் சந்தித்திருந்ததாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பல்வேறு நலன்புரி சங்கங்கள் மற்றும் அதனை ஒத்த நிறுவனங்களை நிறுவி அதில் அவர்கள் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்கள் என மேலதிக விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புகளுக்கு நன்கொடைகளாக நிலங்களும் சில முதலீடுகளும் பெறப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனவிரத்ன தெரிவித்தார்.
 
 

 

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பொலிஸ் அத்தியட்சகர், தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களிடையே வழக்கறிஞர் ஒருவர் அடங்குவதாகவும், அவர் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் எனவும் மேற்கூறிய நிறுவனங்களில் பல்வேறு பதவி வகித்துவந்த நிலையில் தற்கொலைதாரிகளுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் 119 பேரும் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் 78 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 40 சந்தேக நபர்களும், டபயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 52 சந்தேக நபர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
நிலைமைகள் சற்று சிக்கலானது என்பதால் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.