--> -->

எதிர்வரும் போயா தினங்களில் படையினருக்கு நல்லாசி வேண்டி ஒளிவிளக்கு ஏற்றுமாறு செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் வேண்டுகோள்

மே 05, 2020
தன்னலமற்ற சேவைள் பலவற்றை நாட்டுக்கு அளிக்கும் படையினருக்கு நல்லாசி வேண்டி விஷேட நிகழ்வுகள் பல எதிர்வரும் வெசாக் போயா தினங்களில் செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னணியில் போராடி வரும் முப்படையினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த செயற்பாட்டினை நினைவுகூர்ந்து அவர்களுக்கான ஆசி வேண்டி 'அதிஷ்டான பஹன்' விளக்கை ஒளிரச் செய்ய பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இதற்கமைய கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சேவையில் ஈடுபட்டவேளையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விரைவில் குணமடைய அவர்களுக்கு ஆசி வேண்டி நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் எதிர்வரும் 7ஆம் திகதி மாலை 6.15 மணி அளவில் ஒளிவிளக்கு ஏற்றுமாறு இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 
ரணவிரு சேவா அதிகார சபை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் பிரதி தலைவியுமான சோனியா கோட்டேகொடவின் பணிப்புரைக்கமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முப்படை வீரர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் கொடிய வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க போராடும் வேளையில் அவர்கள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானதாக செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"எதிர் காலத்தில் நாட்டுக்கான தங்களது பணியைத் தொடர ஊக்குவிக்கும் அதே வேளையில், அந்த வீரர்களுக்கு அவர்களின் துன்பத்தில் ஆசீர்வாதம் வேண்டிப் பிரார்த்திப்பது அனைத்து இலங்கையர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்," என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிகழ்வின் மூலம், நமது மண்ணிலிருந்து தொற்றுநோயை ஒழிப்பதில் உறுதியற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைகள் மற்றும் சுகாதார சேவைகளின் உறுப்பினர்களுக்கும் செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் தேசத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 
 
"கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் சமூகப் பணிகளைத் தொடர அவர்களை ஊக்குவிக்கவும் முன்னணியில் போராடும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக நாங்கள் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்தோம்" என திருமதி. கோட்டேகொட அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.