--> -->

கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஜூலை 18, 2019

வேவ் ரைடர் படகின் நடவடிக்கை மற்றும் பயிற்சி செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று புதன்கிழமையன்று (ஜுலை,17)கொழும்பு, வெள்ளவத்தை கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களமானது, தெற்கு கரையோர பிராந்தியமான மிரிஸ்ஸவில் திமிங்கிலங்கள் கண்காணிப்பினை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையிடம் இருந்து வேவ் ரைடர் படகுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜிடிஏஎஸ் விமலதுங்க மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எம்ஜிபி சூரியபண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர். இவ்வொப்பத்தத்தின் பிரகாரம் வேவ் ரைடர் படகு பாவனை தொடர்பான பயிற்சிகள் மற்றும் நடவடிக்கை தேர்ச்சிகள் என்பன தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதன்போது கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திமிங்கலங்களை அவதானிப்பதற்கு இலங்கை ஒரு முக்கிய தளமாக உள்ளதுடன், அதில் தெற்கு கடற்கரை பிராந்தியம் பிரதான பங்கு வகிக்கின்றது. ஏனெனில் இந்த பகுதிகளில் இந்து சமுத்திர வெப்ப நீர் திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்கள் உள்ளிட்ட கடல் பாலூட்டிகளுக்கு பிரபலமான தளமாகும். திமிங்கலங்களை அவதானித்தல் பொழுதுபோக்கு நிகழ்வானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பிற சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்கிறது. சுற்றுலாத் துறையைச் சார்ந்த இத்துறை பிராந்தியத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

இலங்கை கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஆகியன வனவிலங்கு மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளூர் சுற்றுலாத் துறையைத் தக்கவைக்க உதவுவதுடன் திமிங்கலக் கண்காணிப்பு மற்றும் கடல் பாலூட்டி ஒழுங்குமுறை பொறிமுறையை செயல்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாகவும் அமையவுள்ளது.

இலங்கையில் திமிங்கலம் மற்றும் டொல்பின்களை அவதானிப்பதற்கு பிரபலமான இடங்களாக தெற்கு கடற்கரையில் மிரிசா மற்றும் காலி, கிழக்கு கடற்கரையில் திருகோணமலை மற்றும் கல்பிட்டி கடல்கள் ஆகியவை விளங்குகின்றன.