--> -->

2020 பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜூலை 13, 2020

இவ்வருட பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (ஜூலை, 13) ஆரம்பிக்கப்பட்டு எதிர் வரும் 17ஆம் திகதிவரை இடம்பெற உள்ளது.

இதனடிப்படையில், சுகாதார அமைச்சின் பணியாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல ஊழியர்கள் ஆகியோர் இன்று (13) தமது தபால்மூல வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளின்போது அனைத்து சுகாதார வழிமுறைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் சேவைகள்  தேவைப்படுகின்றமையினால் இவ்வாறு அவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.  

குறித்த நாட்களில் அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காத பட்சத்தில் அவர்களின் மாவட்ட தேர்தல் காரியாலங்களில் இம்மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட் – 19 சுகாதார வழிமுறைகளான சமூக இடைவெளிகளை பேணல், முகக்கவசம் அணிந்திருத்தல் மற்றும் கைகளை கிருமி தொற்றுநீக்கம் செய்திருத்தல் உட்பட வாக்குச்சீட்டில் அடையாளம் இடும் வகையில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாக்களும் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்தற்கு அமையவே தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பொது அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் தபால்மூல வாக்களிக்க  தகுதியானவர்களாவார்.

இம்முறை பொதுத் தேர்தல் 2020 ஆகஸ்ட்  மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.