--> -->

போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவிய சிறைச்சாலை சார்ஜன் கைது

ஜூலை 28, 2020

போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு உதவியமை தொடர்பில் கொழும்பு சிறைச்சாலையில் பணிபுரியும்  சார்ஜன் ஒருவர் பொலிஸாரினால் நேற்று (ஜூலை 27) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போதே 36 வயதுடைய குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.   

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தலைமையில் மேல் மாகாண (வடக்கு ) குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவலைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தவேளையில் போதைபொருள் வியாபாரத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பெரும்தொகையான பணத்தை கார் ஒன்றின் மூலம் எடுத்துசெல்வதற்கு பாதுகாப்பு வழங்கியமை தொடர்பிலேயே  குறித்த சந்தக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது பூச சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாதாள உலக குற்றவாளியான கொஸ்கொட தாரகவுடன்  போதைபொருள் விற்பனைக்கான  பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை பேணியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  ரோஹன பிரதீப் என்றழைக்கப்படும் மற்றுமொரு சந்தேக நபருடன் தொடர்புகளை வைத்திருந்தமைக்காவவே குறித்த சிறைச்சாலை சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலதிகவிசாரனைகள் பேலியகொடை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.   

இதேவளை, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை மதில்களுக்கு மேலாக போதைபொருள் பொதிகள் பலவற்றை வீசிய பிரதான சந்தேகநபர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஹெரோயீன் போதைப்பொருள், நான்கு கையடக்க தொலைபேசிகள், மேலும் பல தடைசெய்யப்பட்ட பொருட்களும் தன்வசம் வைத்திருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.