--> -->

தீப்பரவல் ஏற்பட்டுள்ள எண்ணெய் கப்பலின் கெப்டன் மற்றும் காயமடைந்தவர்களும் இலங்கை கடற்படையினரால் மீட்பு

செப்டம்பர் 03, 2020
  • இரண்டு ரஷ்ய கப்பல்களும் தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இணைவு
  • இலங்கை விமானப்படையின் மற்றுமொரு பெல் 212 ரக உலங்குவானூர்தியும் இணைவு  

சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக காயமடைந்த மூன்றவது பொறியியலாளரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.   

குறித்த மீட்பு நடவடிக்கையின்போது, தீப்பரவல் ஏற்பட்டுள்ள கப்பலின் கெப்டன் உட்பட மற்றுமொரு பணியாளரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இக்கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கப்பலில் இருந்த ஏனைய பணியாளர்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அண்மையில் இலங்கை நாட்டை வந்தடைந்து ஹம்பாந்தோட்டையில் தரித்திருந்த இரண்டு ரஷ்ய கப்பல்களும் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்து குறித்த தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை விமானப்படையின் எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி ஒன்றும் பம்பி பக்கெட் உடனான பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்றும் குறித்த தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.