--> -->

எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் தீப்பிழம்புகளோ அல்லது புகையோ ஏற்படவில்லை - கடற்படை தெரிவிப்பு

செப்டம்பர் 09, 2020
  • நிர்க்கதிக்குள்ளான கப்பலுக்கு கடற்படை வீரர்கள் அனுப்பி வைப்பு.

நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பலிலிருந்து இன்று (09) எவ்வித தீப்பிழம்புகளோ அல்லது புகையோ அவதானிக்கப்படவில்லை இலங்கை  கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பல் மற்றும் கச்சா எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தாங்கிகளின் தற்போதைய நிலைகள் தொடர்பில் கண்காணிக்கவென கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கே தென்னவின் பணிப்புரைக்கமைய கடற்படையின் விசேட தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழு நிர்கதிக்குள்ளாகியுள்ள கப்பலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கப்பலை அண்மித்த கடற்பரப்பில் எண்ணெய் கசிவுகள் அவதானிக்கப்பட்டதாகவும்  அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய கடலோர பாதுகாப்பு படையின் டோனியர் ரக விமானம் குறித்த பகுதியில் இரசாயனக் கலவைகளை விசிறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் கச்சா எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான எதுவித சாத்தியக்கூறுகளும் இதுவரை அவதானிக்கப்படவில்லை எனவும்  அவர் உறுதிப்படுத்தினார்.

குறித்த சம்பவம் காரணமாக இப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆராய, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான நீர் வள ஆராய்ச்சி கப்பல் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கப்பலினால் ஏற்படக்கூடிய விளைவுகளை தடுக்கும் வகையில் குறித்த கப்பல் தரைப்பகுதியில் இருந்து சுமார் 37 கடல் மைல் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைப்பதற்காக கடந்த மூன்று நாட்களாக இலங்கை விமானப்படையின் பெல் 212  ரக மற்றும் எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களின் மூலம்  சுமார் 4,500 கிலோ கிராம்  தீயணைப்பு பயன்படுத்தப்படும் உலர் இரசாயன கலவைகள் வீசப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

அத்துடன் 440,000 லீட்டர் தண்ணீர் பம்பி பக்கெட்டினை பயன்படுத்தி தீயின் மீது விசிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது ஒரு  தடவைக்கு 2500 லிட்டர் கொள்ளளவுடைய தண்ணீர் பம்பி பக்கட் மூலம் எடுத்துசெல்லப்பட்டு சுமார் 176 தடவைகள்  தீயின் மீது விசிரப்பட்டதாக கெப்டன் விஜயசிங்க தெரிவித்தார்.

மேலும், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கு அமைய மூன்று விமானப்படை ஸ்கொட்ரன்கள் இந்த கூட்டு  நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.