--> -->

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகள் நாளை ஆரம்பம்

ஒக்டோபர் 21, 2020
         

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (ஒக்டோபர், 22)  தீகவாபி  விகாரையின் பிரதம விகாராதிபதி வண.  மஹாஓயா சோபித்த தேரரின் வழிகாட்டுதலுக்கமைய  விகாரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 

 

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகள், பாதுகாப்பு செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள  'தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின்  தலைவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் பணிப்புரைக்கமைய பாதுகாப்பு படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின்  உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த தூபியின் புனர்நிர்மாணப் பணிகள் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள துறைசார் நிபுணர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொல்பொருள் ஆலோசனைகளுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளன.

தீகவாபி அறக்கட்டளை நிதியத்திற்காக உள்நாட்டு, வெளிநாட்டு தனவந்தர்கள் மற்றும்  பக்தர்களிடமிருந்து   திரட்டப்படும்  நன்கொடை  மூலம் கிடைக் பெறும் நிதியிலிருந்து, இந்த புனர்நிர்மாண பணிகளை  முன்னெடுக்க  எதிர்பார்க்கப்படுகிறது.

பதினாறு பெளத்த வழிபாட்டுத் தலங்களில் புனிதமான தலங்களில் ஒன்றாக புகழ்பெற்ற ‘தீகவாபி’, நீண்ட காலமாக எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகின்றமை தொடர்பாக இந்த விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மஹாஓயா  சோபித்த தேரரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்தே  இந்த தூபியின் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் தீகவாபி தூபியை புனர்நிர்மாணம் செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை இடைநடுவில் கைவிடப்பட்டன. எனினும் இம்முறை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த பண்டைய விகாரையின் புனர்நிர்மாணப் பணிகள்  திட்டமிட்டபடி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

தீகவாபி பெளத்த விகாரை மற்றும் அதனை அண்டிய தளம் என்பன சத்தாதிஸ்ஸ மன்னனினால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும்.

புத்த பகவான் இலங்கைக்கு தரிசித்த இடமாக புகழ்பெற்ற இந்த புனித தளம், உள்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பெளத்த சமய பக்தர்களினால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மஹாஓயா சோபித்த தேரர் உள்ளிட்ட  மகா சங்கத்தினர், கிழக்கு மாகாணம் ஆளுநர் அனுராதா யஹம்பத், பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சித்ரானி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விவேந்திர சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு)  ஆனந்த பீரிஸ், தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகே, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு படைகள்மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுளனர்.