--> -->

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் படைக் குழுவினர் இராணுவத் தளபதியினால் வழியனுப்பி வைப்பு

நவம்பர் 18, 2020

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் 7வது படைக் குழுவினரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழியனுப்பி வைத்தார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர் அமைதிகாக்கும் பணிகளுக்காக செல்ல உள்ள படைக்குழுவினரை சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை வரவேற்பதற்காக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சிலர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது இராணுவத் தளபதிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் தென் சூடானில் இரண்டாம் நிலை வைத்தியசாலையில்  அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடவுள்ள  முதல் கட்ட குழுவினர் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடினர்.

தென் சூடானிற்கு புறப்பட்ட கேர்ணல் ரொஷான் ஜயமன்ன தலைமையிலான 7 வது படைக் குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள், 4 மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவர், 1 கட்டளை அதிகாரி, 7 நிர்வாக அதிகாரிகள், மருத்துவ படையணியின் 41 படைவீரர்கள் மற்றும் சமிஞ்சை படையணி, பொறியியலாளர் சேவை படையணி மற்றும் இலங்கை இராணுவ சேவைகள் படைணியைச் சேர்ந்த 9 படை வீரர்கள் அடங்குகின்றனர்.

தென் சூடானில் உள்ள 6 ஆவது படைக் குழுவினரில் மீதமுள்ள படையினர் 2020 டிசம்பர் 8 ஆம் திகதி இலங்கை வருகை தந்த பின்னர் ஏழாவது படை குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய படை வீரர்கள் 2020 டிசம்பர் 9 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட உள்ளனர்.

ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளில் பங்களிப்புக்காக  அங்கீகரிக்கப்பட்ட இலங்கை படைவீரர்கள் ஆபிரிக்க கண்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவற்றின் செயற்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது.

படையினரை வழியனுப்பி வைக்கும் இந்த நிகழ்வில் பிரதி இராணுவ பிரதானி மற்றும் பதவிநிலை அதிகாரிகளின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.