--> -->

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான போக்குவரத்து கெடுபிடிகள் இலகுவாக்கம்

மே 10, 2019

உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பல்வேறு மாற்று நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் விமான நிலையத்திற்கு முன்னரே இறங்கி தமது பயண பொதிகளை சிறிது தூரம் இழுத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருந்து.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத் தரும் பயணிகளின் நலனை கருதி இலங்கை விமானப் படை விஷேட போக்குவரத்த மற்றும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் வருகை தரும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகள் எவ்வித தங்குதடையின்றி தமது பொதிகளுடன் வாகனத்தில் வந்துச் செல்ல முடியும். பயணிகள் தமது சொந்த அல்லது கூலி வாகனங்களில் பொதிகளுடன் சென்று இறங்கும் பொருட்டு விஷேட ஏற்பாட்டை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விமானப் படையினர் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன கொள்ளுப்பிட்டி, பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இதேவேளை, விமான நிலையத்தின் பாதுகாப்பு போதியளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல், கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது எவ்வித தராதரமின்றி செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் கல்வி அமைச்சின் உதவி பணிப்பாளர் அண்மையில் நுரைச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் சந்தேக நபரின் அலுவலகத்தை சோதனையிட்ட போது அவர் பயன்படுத்தி லெப்டொப்பை தலங்கம பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அதிலுள்ள தரவுகளை பெற்றுக் கொள்ள விஷேட நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தினார். சுற்றுலாத்துறை அதிகார சபையின் மனிதவள அபிவிருத்தி பணிப்பாளரினால் தமது நிறுவனத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்கள் ஊடாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்து தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படாதவையாகவே காணப்படுகின்றது. குறித்த கடிதத்தை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பிரசுரித்த சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தன.
சந்தேக நபர் வேறு நிறுவனத்தின் ஊடாக சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபைக்கு சேவைக்கு அமர்த்தப்பட்டவர். பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் தொடர்பான ஆரம்பக்கபட்ட விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரரும் இரண்டு நெருங்கிய நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு டியூக் வீதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக 26 போலி இரப்பர் முத்திரையை வைத்திருந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

சோதனைக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முற்பட்ட போது சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் கடமையில் ஈடுப்பட்டிருந்த கடற்படை வீரரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் படுகாமடைந்த கடற்படை வீரர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தப்பிச் சென்ற சந்தேகநரிடமிருந்து கீழே விழுந்த கத்தி மற்றும் தலைக்கவசம் ஒன்றையும் கடற்படையினர் மீட்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை தேடிக் கைது செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

அவசர கால சட்டம் நடைமுறையிலுள்ள போது இவ்வாறு நடந்து கொள்வது பாரதூரமான குற்றமாகும். எனவே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.