--> -->

காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்

நவம்பர் 25, 2020
  • நில அபகரிப்புக்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய விஷேட பிரிவு ஸ்தாபிப்பு

சட்டவிரோத காடழிப்பு பெருமளவில்  பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான  முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது  தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

இது போன்ற முயற்சிகளை தடுக்க  முப்படையினரும்  பொலிஸாரும்  விழிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணித்துள்ள அதேவேளை விமானப்படை தமது வளங்களை பயண்படுத்தி வான்வழி கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாரஹென்பிட்டவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் இன்று இடம்பெற்ற மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டதுடன் "எமது எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

மேலும் வனவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் இயற்கை வளங்கள் அழிவடைந்து செல்வதற்கு எதிராக செயற்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் இடம்பெற்ற காணி அபகரிப்பு சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், காணி அபகரிப்புடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய விஷேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பல்வேறு  சிரமங்களுக்கு மத்தியில் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட செயலாளர்களினால் அளிக்கப்பட  முக்கிய பங்களிப்பை பாராட்டிய அவர், குறைந்தளவு பரவல் நிலவுகின்ற  மாவட்டங்களில் உள்ள  மாவட்ட செயலாளர்கள், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பெரும் முயற்சி எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வைரஸினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அவர்களது ஊழியர்களுடன் இணைந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்  பெரும் முயற்சி எடுத்தனர் என தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் /அரசாங்க அதிபர்கள், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரச  அதிகாரிகள் மற்றும் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்துடன் கலந்தாலோசித்து விரைவான நடவடிக்கைகளை எடுத்தனர் என மேஜர் ஜெனரல் குணரத்ன சுட்டிக்காட்டினார்.

சமூகத்திற்கான நலன்புரி  நடவடிக்கைகளை  மேம்படுத்துவதற்காக பெருமளாவு நிதியை செலவிடுவதாக குறிப்பிட்ட  அவர், பிராந்திய  அரச  அதிகாரிகள் சுய-தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு வசதி செய்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

முன்னர் கடற்படை கொத்தணியில் ஏற்பட்ட  வைரஸ் தொற்றை முற்றாக படை முகாமுக்குள்ளே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை உதாரணமாகக் கொண்டு "போகம்பர சிறைச்சாலையில் ஏற்பட்ட  வைரஸ் தொற்று, சமூகத்திற்குள்  பரவலடையாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்" குறிப்பிட்டார்.

மேலும், தேவையற்ற நடமாட்டங்களை மட்டுப்படுத்தும் அதேவேளை சுகாதார அமைச்சு வழங்கும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பிரஜைகளுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட செயலாளர்/ அரசாங்க அதிபர்களை பாதுகாப்பு செயலாளர் இதன் போது கேட்டுக்கொண்டார்.