--> -->

பன்முக சமூகத்தின் நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாப்பதன் பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும்

மே 07, 2019

வெளிநாட்டு இராணுவத்தினரை இலங்கைக்கு ஒருபோதும் வரவழைக்க மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

மிலேட்சத்தனமான பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எமது இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நாட்டு மக்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (05) பிற்பகல் குருணாகல், வாதாகட ஸ்ரீ விஜயசுந்தராராம புராண விகாரையில் இடம்பெற்ற வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எமது இராணுவத்தினர் மீது தான் பூரண நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்தினரையும் நாட்டினுள் வரவழைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஐ எஸ் அமைப்பு போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பினை தோல்விடையச் செய்வதற்கு வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரும் எமது புலனாய்வு பிரவினரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வெளிநாட்டு புலனாய்வு பிரவினரிடமிருந்து தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.

அடிப்படைவாத கருத்துடைய மிகச் சிறிய குழுவினரால் அரங்கேற்றப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பது உகந்ததல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வகையான எண்ணங்களினால் ஒரே தேசமாக நாம் முன்னெடுத்துள்ள பயணத்திற்கு பாதகம் ஏற்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

மிலேட்சத்தனமான பயங்கரவாதம் நாட்டினுள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்பதோடு நாட்டு மக்களிடையே நிலவும் அச்சத்தையும் அவநம்பிக்கையும் இல்லாதொழித்து சமாதானமும் சுதந்திரமும் மிக்க சமூகத்தை நோக்கி நாம் துரிதமாக பயணிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகள் இலங்கையில் மாத்திரமன்றி அமெரிக்கா, ஐரோப்பா போன்ற உயர் பாதுகாப்பு சட்டதிட்டங்களை கொண்டுள்ள உலகின் செல்வந்த நாடுகளுக்கும் சவாலாக அமைந்திருப்பதாக தெரிவித்தார். ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்றும் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு கட்சி, இன, மத பேதங்களை துறந்து அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுகின்றமை மகிழ்ச்சி தருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாளை முதல் ஆரம்பமாகவிருக்கும் பாடசாலை புதிய தவணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு தேவைப்படுகின்ற அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு பாதுகாப்பு துறை வலுவாக இருப்பதாகவும் பாதுகாப்பு துறையினர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

குருணாகல் வாதாகட ஸ்ரீ விஜயசுந்தராராம புராண விகாரையின் போதி மரத்தை சுற்றி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வேலியும் ஸ்ரீ சம்புத்த அசு மகாஸ்ராவக வணக்கஸ்தலமும் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய தங்க வேலியை திறந்து வைத்ததுடன், போதி மரத்தின் அருகாமையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் கலந்துகொண்டார். அதன் பின்னர் ஸ்ரீ சம்புத்த அசு மகாஸ்ராவக வணக்கஸ்தலத்தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தின்போது சிற்பங்களை வடிவமைத்த சிற்பக்கலை நிபுணர் எஸ்.ஜே.சோமரத்னவிற்கு ஜனாதிபதி அவர்கள் நினைவுப்பரிசொன்றும் வழங்கி வைத்தார்.

தெமடவெவ திக்வெஹர உபய விகாராதிபதி சங்கைக்குரிய ரெகவ ஜினரத்ன நாயக்க தேரர், வெஹரபிட்டிய பிரிவெனாதிபதி சங்கைக்குரிய தெல்தெனியே ரத்னாசாராபிதான நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் பக்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk