--> -->

தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் நடைபெறும்

மே 08, 2023

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பூர்வாங்க  கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08) காலை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான  சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்வரும் மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய படைவீரர் நிகழ்வு நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள்,சபாநாயகர், இராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு  பிரதானிகள், போரில் காயமடைந்த படைவீரர்களின் பங்களிப்புடன் நடைபெறும்.

இந்த படைவீரர்  நினைவு தின  நிகழ்வில் பங்குபற்றுவதற்காக யுத்ததில் காயமடைந்த படைவீரர்கள்,  வீரமரணம் அடைந்த படை வீரர்களின் உறவினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டும்  பெருமைக்குரிய வகையில்  படைவீரர் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு உயிர்த்தியாகம் செய்த இராணுவம், விமானம்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில்  பாதுகாப்புப்படை வீரர்களின்  நித்திய நினைவுகளையும், வீரத்தையும் போற்றும் வகையில் விசேட  படைமேள தாளமும், மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்(ஓய்வுபெற்ற) கமல்குணரத்ன தெரிவித்தார்.  

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரிவு பிரதானிகள்  கலந்துகொண்டனர்.

நன்றி - www.pmd.gov.lk