--> -->

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்

மார்ச் 06, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மொஹமட் கஸ்ஸான் மஃமூனை நேற்று (மார்ச் 05) மாலைதீவு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் தென்னகோன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்ற அமைச்சர் கஸ்ஸான் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமைக்கு நன்றி தெரிவித்தார். மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான பயிற்சி உதவிகளுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்திய அமைச்சர் கஸ்ஸான், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்குமிடையில் மேடற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு முயற்சியின் முக்கியதுவத்தை இதன்போது எடுத்துரைத்தார்.

மாலைதீவுக்கு விஜயம் செய்யுமாறு அழைத்தமைக்காக மாலைதீவு பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சர் தென்னக்கோன் நன்றி தெரிவித்தார். மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படைக்கு தொடர்ச்சியான இராணுவ கல்வி மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.

மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் தேவைகளை அடையாளம் காணவும் மாலைதீவுடனான பயிற்சி நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.

இதேவேளை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வன்முறை தீவிரவாதம், சட்டவிரோத ஆட்கடத்தல், அனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையில் நடந்து வரும் யுத்தம் காரணமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் நிலைமை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், ஏற்கனவே உள்ள உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை அடையாளம் காணுதல், பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இராஜாங்க அமைச்சருடன் இலங்கை இராணுவத்தின் இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுமித் நந்தன, மாலைதீவு வெளிவிவகார செயலாளர் பணியகத்தின் பணிப்பாளர் மெக்ஸ்வெல் கீகல், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மாலைதீவின் கொள்கைகள் திணைக்களத்தின் முதன்மை பணிப்பாளர் கேர்ணல் ஹுசைன் இப்ராஹிம், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சின் இராணுவச் செயலாளர் கேர்ணல் ஹசன் பஷ்ரி, இலங்கைக்கான மாலைதீவின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர் மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விங் கொமாண்டர் ரணசிங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.