--> -->

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் ‘பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பணியில் பெண்களுக்கு உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கு.

ஏப்ரல் 29, 2024

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் (INSS), School of Behavioural Forensics (NFSU), India மற்றும் ஐரோப்பிய பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (EUCTER), பிரஸ்ஸல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து “பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பணியில் பெண்களுக்கு உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’” எனும் கருப்பொருளில் கூட்டு இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி இணையவழி கருத்தரங்கு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இதன்போது ஏழு தனித்துவமான தலைப்புகளின் கீழ் ஏழு அமர்வுகள் மற்றும் மூன்று முக்கிய விரிவுரைகளும் இடம்பெற்றன.

அமைச்சின் அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், இலங்கை ஆயுதப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்த கருந்தரங்கில் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு உள்ள தற்போதைய சவால்கள் மற்றும் கருத்தரங்கின் முக்கிய தலைப்பு தொடர்பாக முன்னோக்கி செல்லும் வழிகளின் முக்கியத்துவம் குறித்து இதன் போது அனைத்து தரப்பினராலும் கலந்துரையாடப்பட்டதாக குறித்த ஊடக அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றில் உயர் மட்டத்திறன் கொண்ட பெண் அமைதிப்படைகளின் செயல்திறன், மோதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் பெண்களின் சிறந்த புரிதல் ஆகியவற்றை வலியுறுத்தி, உலகளாவிய அமைதி காக்கும் முயற்சிகளில் பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளை உருவாக்குதல் மற்றும் வழிநடத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி இதன்போது கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1325 இன் முக்கியத்துவம், பெண்கள் மீதான போரின் தாக்கம் மற்றும் முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.