--> -->

143வது ஆண்டு நிறைவை கொண்டாடும் தேசிய மாணவர் படையணி

ஏப்ரல் 29, 2024

ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்ட தேசிய மாணவர் படையணி, 2024 ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் அதன் 143வது ஆண்டு விழாவை ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் கொண்டாடுகிறது.

1881ஆம் ஆண்டில் அப்போதைய ரோயல் கல்லூரியின் அதிபராக பணியாற்றிய திரு.ஜோன் பி கல் அவர்களின் எண்ணக்கருவின்படி ரோயல் கல்லூரி மாணவர்களிடையே ஒழுக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் 'அணிநடையின் மூலம் ஒழுக்கம்' என்ற தொனிப்பொருளில் மாணவச்சிப்பாய் குழு ஆரம்பிக்கப்பட்டு, இன்று பாடசாலை மாணவர்களை எதிர்கால தலைவர்களாகவும், ஒழுக்கமான குடிமக்களாகவும் உருவாக்குவதன் மூலம் சிறந்த தேசிய சேவையை தேசிய மாணவர் படையணி ஆற்றி வருகிறது.

பிற்காலத்தில் நமது தேசத்தின் தலைவர்களாக உருவாகிய மாணவர் படையணியின் சில வீரர்கள், தங்கள் சொந்த உயிர்களையும் விலையாகக் கொடுத்து இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசத்திற்கு ஆற்றிய இந்த மகத்தான சேவையை பாராட்டி கடந்த வருடம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தேசிய மாணவர் படையணிக்கு ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணங்களும் வழங்கப்பட்டன.

143வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், தேசிய மாணவச்சிப்பாய் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா மற்றும் தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரவரிசை வீரர்களும் ரன்தம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் ஒன்று கூடினர்.

தேசிய மாணவர் படையணியின் அனைத்து பிரிவுகளுக்குமான கொடிகளும் ஏப்ரல் 28ஆம் திகதி மஹியங்கனை ரஜமஹா விகாரையில் அதன் பணிப்பாளர், பிரதான பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து மகா சங்கத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய மாணவர் படையின் 143வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற மரம் நடும் விழாவைத் தொடர்ந்து, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர், பயிற்சி நிலையத்தில் உள்ள கடந்த காலங்களில் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவுச்சின்னத்தில் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.