--> -->

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிசம்பர் 25, 2020

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும். இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.

இயேசு பிரான் போதித்த சமய நெறிகள் சமூகத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் பல போதனைகளை கொண்டுள்ளது. பாவத்தின் இருளகற்றி, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சகோதர வாஞ்சையுடன் உதவுவது மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்கான அர்ப்பணிப்பு என்பவை இவற்றில் முதன்மையானவை என்று நான் எண்ணுகிறேன். கோவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இந்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வருடத்திற்கும் முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும், அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும்.

இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக! இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான எனது நத்தார் நல்வாழ்த்துக்கள்.

 

கோட்டாபய ராஜபக்ஷ
2020 டிசம்பர் 24 ஆம் திகதி

 

 

நன்றி - www.pmdnews.lk