மத வழிபாட்டுத் தலங்களில் இணைக்கப்பட்டுள்ள இராணுவ
வீரர்களை அகற்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை                        
                        
                          நவம்பர் 03, 2024                            
                        
                    பௌத்த விகாரைகள் உட்பட வழிப்பாட்டு தலங்களின் பாதுகாப்பை முறையாகப் பேணுவதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர் 03) இடம்பெற்றது.
இது உண்மைக்கு அடிப்படையற்ற செய்தி எனவும் தற்போது பௌத்த விகாரைகளிலோ அல்லது புனித ஸ்தலங்களிலோ பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அகற்றுவதற்கு அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் பேச்சாளருமான கேர்ணல் நளின் ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை இராணுவத்தின் ஊடகப் பணிப்பாளர் நாயகமும் பேச்சாளருமான மேஜர் ஜெனரல் ரசிக குமார மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டங்கள்) கேர்ணல் துமில் பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.