நாட்டு மக்களை பாதுகாப்பதே எங்களின் தலையாய 
பொறுப்பு - பதில் பாதுகாப்பு அமைச்சர்                        
                        
                          டிசம்பர் 16, 2024                            
                        
                    ஒரு நாட்டின் பொக்கிஷம் அதன் குடிமக்கள். இராணுவத்தின் பொக்கிஷம் அதன் வீரர்கள். நாட்டின் இராணுவம் என்ற வகையில், நாட்டு மக்களை பாதுகாப்பதே நமது தலையாய பொறுப்பு என பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (டிசம்பர் 16) தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்ட பதில் பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
படைவீரர்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு), புதிய அரசாங்கம் என்ற வகையில் முதற்கட்டமாக, ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் மூலம், நாட்டு மக்களின் மனோபாவங்களை தூய்மைப்படுத்தி, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நாட்டை உருவாக்க தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. இராணுவம் இந்த பணிக்கான முக்கிய பொறுப்பை ஏற்கும் அரசு நிறுவனமாகும் என மேலும் தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்த பதில் பாதுகாப்பு அமைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றார். அவருக்கு அணிவகுத்து மரியாதை ஒன்றும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை பதில் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதனையடுத்து, பதில் பாதுகாப்பு அமைச்சரும், இராணுவத் தளபதியும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன். இதனையடுத்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பதில் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து தலைமை தாங்கினார்.
அதன் பின்னர், மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) அதிதிகள் புத்தகத்தில் குறிப்பு ஒன்றை பதிவு செய்ததுடன், இராணுவத் தளபதி அவர்கள் நிகழ்வைக் குறிக்கும் வகையில் பதில் பாதுகாப்பு அமைச்சருக்கு சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
இலங்கை இராணுவத்தின் பிரதானி, இராணுவத் தலைமையக அதிகாரிகள், ஏனைய அணிகள் மற்றும் சிவில் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.