பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி
 அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்                        
                        
                          ஜனவரி 08, 2025                            
                        
                    இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன 06) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்தும் நோக்கத்தில் இலங்கை ஆயுதப்படைகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் உட்பட பரஸ்பர முக்கியத்துவம் மிக்க பல முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினர். அத்துடன் பாக்கிஸ்தானின் தொழில்நுட்ப உதவி, நிபுணத்துவம் மற்றும் அறிவாற்றல் மூலம் இலங்கையின் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் திறன்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்தல், மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூக பாதுகாப்பின்மையை எதிர்த்துப் போராடுவதற்கு ஒத்துழைப்புடன் பணியாற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளுக்காக பிரதியமைச்சர் பாகிஸ்தான் தூதுவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.