இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு உரையாடல் 
 மூலோபாய உறவுகளை வலுப்படுத்துகிறது                        
                        
                          ஏப்ரல் 29, 2025                            
                        
                    இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், 5வது வருடாந்த இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடள் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆரம்பமாகியது.
இலங்கைக் தூதுக்குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்குகிறார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஜயந்த எதிரிசிங்க, இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் இலங்கை விமானப்படை பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர ஆகியோர் தூதுக்குழுவில் அடங்குவர்.
பாகிஸ்தான் தூதுக்குழுவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி (ஓய்வு) தலைமை தாங்குகிறார். நடைபெற்ற வரும் பாதுகாப்பு கலந்துரையாடலுடன் இணைந்ததாக, எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (ஏப்ரல் 29) பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முஹம்மது ஆசிஃப் உடன் சந்திப்பொன்றை நடத்தினார்.
இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்த பரஸ்பர புரிதலை வளர்த்தல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பில் வேரூன்றிய நீண்டகால உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் அமைதியை மேம்படுத்துவதிலும் கூட்டாண்மைகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த கலந்துரையாடகள் பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை (ஏப்ரல் 30) நிறைவடையும் இந்த மூன்று நாள் கலந்துரையாடள், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் பரந்த பிராந்திய பாதுகாப்பு நோக்கங்களுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.