இலங்கை-பாகிஸ்தான் 5வது பாதுகாப்பு கலந்துரையாடல்
வெற்றிகரமாக நிறைவடைந்தது

மே 03, 2025

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், 5வது இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடல் ஏப்ரல் 30 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏப்ரல் 28 அன்று தொடங்கிய உயர்மட்ட கலந்துரையாடல்கள், இரு நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை ஒன்றிணைத்து, தற்போதுள்ள பாதுகாப்பு மற்றம் ஒத்துழைப்பு கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்யவும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் வழிவகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நாள் நிகழ்வின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பாகிஸ்தானில் உள்ள முக்கிய பாதுகாப்பு மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு விஜயம் செய்தது. ஏப்ரல் 29 அன்று, தூதுக்குழு பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான இரண்டு பாதுகாப்பு நிறுவனங்களான பஞ்சாபில் உள்ள Heavy Industries Taxila (HIT) மற்றும் கைபர்-பக்துன்க்வாவில் உள்ள National Radio & Telecommunication Corporation (NRTC) ஆகியவற்றை பார்வையிட்டது.

பாதுகாப்பு செயலாளருடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஜயந்த எதிரிசிங்க, இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் விமானப்படை பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர உட்பட பல சிரேஷ்ட இலங்கை இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி திறன்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்று, மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை ஆராய தூதுக்குழு இச் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் கலந்துரையாடலின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில், இலங்கை தூதுக்குழு மே 02 அன்று நாடு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.