தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு கூட்டத்தில்
பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்
மே 21, 2025
தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு (NASC) இன்று (மே 21) பத்தரமுல்லையில் உள்ள மகநெகும - மகாமெதுர வளாகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்குழுவின் இணைத் தலைவரான பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (UNCLOS) மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான சிக்காகோ மாநாடு ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையின் நியமிக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் மண்டலம் (SRR), அதன் பிராந்திய கடல் பிரதேசம் மற்றும் அருகிலுள்ள ஆள் கடல் பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இதில் வான்வழி மற்றும் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குவது நாட்டின் பொறுப்பாகும்.
இவ்வாறான தேடல் மற்றும் மீட்பு மண்டல வரையறைகள், ஆபத்திலுள்ள எந்த ஒருவருக்கும் அவரின் நாட்டு அல்லது தனிப்பட்ட அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், தகவல் தொடர்பு, மருத்துவ உதவி, அனர்த்த எச்சரிக்கைகள் மற்றும் உதவி உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பை வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு (NASC), ஆகஸ்ட் 28, 2023 தேதியிட்ட அசாதாரண வர்த்தமானி எண் 2347-02 மூலம் முறையாக நிறுவப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்பு அமைப்பை செயல்படுத்துவதற்கான மூலோபாய தலைமை, வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குவதே இதன் முதன்மையான பணியாகும்.
இந்தக் குழு, நடைபெற்றுக்கொண்டிருக்கும் வான்வழி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது அல்லது அத்தகைய சூழ்நிலைகள் அல்லது தேவை ஏற்படாத போதும், ஆண்டுதோறும் ஒரு முறையாவது கூட வேண்டும் என்பது அவசியமாகும். NASC, பாதுகாப்பு செயலாளர் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோரால் இணைந்து தலைமை தாங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முப்படைத் தளபதிகள் உட்பட உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன், குறிப்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட்டின் தலைவர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், குற்றம் மற்றும் போக்குவரத்து தொடர்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபர் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து தொடர்பான அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.