புத்தளத்தில் நிறுவப்படும் டொப்ளர் வானிலை ரேடார் தளத்தை
பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்

ஜூலை 06, 2025

இலங்கையின் வானிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டுவரும் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று (ஜூலை 05) பார்வையிட்டார். ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் நாடளாவரீதியில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதையும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்ட தளத்திற்கு வந்த பாதுகாப்பு செயலாளரை வானிலை ஆராய்சசி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க அன்புடன் வரவேற்றார். இலங்கையில் இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பாதுகாப்பு அமைச்சுக்கும் வானிலை ஆராய்ச்சி துறைக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை இந்த விஜயம் எடுத்துக்காட்டுகிறது.

டொப்ளர் ரேடார் வலையமைப்பை செயல்படுத்துவது, அதிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தும் என்றும், இதனால் பாதகமான வானிலை விளைவுகளிலிருந்து உயிர் மற்றும் சொத்து அழிவுகளை குறைக்க காத்திரமான முன் எச்சரிக்கைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி அனர்த்த முகாமைத்துவ அமைப்புகளை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் உதவும் என குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவை மிகவும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. கருணாதிலக்க, வானிலை ஆராய்ச்சி துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேச பிரதிநிதிகளாக ஜப்பான் வானொலி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் ஹசாமா ஆண்டோ கார்ப்பரேஷனின் திட்ட முகாமையாளர் தனகா ஷுமேய் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்களின் பங்கேற்பு எடுத்துக்காட்டுவதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வானிலை அறிவியல் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தத் திட்டம், நாட்டின் வானிலைத் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலை தொடர்பான தாக்கங்களுக்கு மீள்தன்மையை அதிகரிப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மற்றொரு சிறந்த திட்டமாக அமையும்.