இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மனித விற்பனை
அபாயம் குறித்து தேசிய மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) அறிவுறுத்தியுள்ளது

ஆகஸ்ட் 11, 2025

இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து புதிய முறையில் மேற்கொள்ளப்படும் மனித விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள் தொடர்பில் மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் அரசு ஒழுங்குமுறை இல்லாமல் செயல்படும் சைபர் மோசடி மையங்கள் ஊடாக பாரிய அளவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. 

இந்தக் வலையமைப்பு உலக நாடுகளிலிருந்து 50,000 பேரை மோசடி முகாம்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்கின்றன. இவர்களில் இலங்கை பிரஜைகளும் முக்கிய இலக்காக உள்ளனர்.

இவ்வாறான புதிய ஐந்து மோசடி மையங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  அண்மைக்கால தகவல்களின் அடிப்படையிலும் அவர்கள் உருவாக்கி செயற்படுத்தும் சுரண்டல் முறைகளின் அடிப்படையிலும் நோக்கும் போது மனித விற்பனையாளர்கள் தவறான இணையவழி தகவல்களையும் தொழில் தேடுவோரை இலக்காக கொண்ட போலியான தொழில் வாய்ப்புக்களையும் பயன்படுத்துவதை அவதானிக்க பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்னும் செயலில் உள்ளன கடந்த சில வாரங்களில் பல இலங்கையர்கள் இம்முகாம்களுக்கு கடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சில பாதிக்கப்பட்டவர்கள் துபாயில் தொழில் செய்யும் போது இம்மோசடி மையங்களுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர். ஏனைய இலங்கையர்கள் நேரடியாக இலங்கையிலிருந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் அனுபவித்த கொடூரமான வதைச் சம்பவங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றில் மின்சாரம் பாய்ச்சல் உள்ளிட்ட பல விதமான சித்திரவதை  இடம்பெற்றுள்ளதைக் கூறி, தற்போது அங்கு சிக்கிக்கொண்டுள்ளவர்களின் பாதுகாப்பும் நலனும் குறித்து கடும் கவலையை எழுப்புகின்றனர்.

இதனால், NAHTTF வழங்கும் அறிவுறுத்தல்கள் கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக மியான்மார், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில்  வேலைவாய்ப்பு தொடர்பான இணைய விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருங்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடைமுறைகளின்படி செல்ல வேண்டும். குடும்பத்தினரும், சமூகத்தினரும் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் காணப்படின் அதனை உரிய அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இது மக்களுக்கான ஒர் அவசர எச்சரிக்கையாகும்.