வருடாந்த NCC பயிற்சி அணிவகுப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்
ஒக்டோபர் 21, 20252025 ஆம் ஆண்டிற்கான Hermann Loos மற்றும் De Soysa Challenge விருதுகளுக்கான வருடாந்த அணிவகுப்பு முகாம் இன்று (அக்டோபர் 21) ரன்டம்பேயில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) NCC இயக்குநர் மேஜர் ஜெனரல் ரஜித பிரேமதிலக்கவினால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், NCC மாணவர்களினால் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இலங்கையின் முதன்மையான பாடசாலை மாணவர் படையணியான NCC நாட்டின் இளைய சமுதாயத்தினரை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கூட்டுக் மேட்பார்வையின் கீழ் செயல்படுகிறது.
மேஜர் ஜெனரல் ஜயசேகர தனது உரையின் போது, மாணவர்களின் குணாதிசயங்களை வடிவமைப்பதில் கெடட் பயிற்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், அவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை நிலைநாட்டுவதிலும் தலைமைத்துவ குணங்களை வளர்ப்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்திற்கு வழங்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக இம்முகாமில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு பாடசாலை படைப்பிரிவுகளின் பங்கேற்பிற்காக அவர் நன்றி தெரிவித்தார். அவர்களின் ஈடுபாடு பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார். எதிர்வரும் வருடங்களில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தங்கள் நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணித்த NCC அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது பிரதி அமைச்சர் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். Hermann Loos சவால் கிண்ணம் (ஆண்கள் பிரிவு) குருநாகல் மலியதேவ கல்லூரி வென்றதுடன், De Soysa சவால் கிண்ணம் (பெண்கள் பிரிவு) கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி வென்றது.
இவ்விழாவில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கெடட்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.