கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலிலிருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்பு
ஒக்டோபர் 26, 2025அனர்த்தத்துக்குள்ளான INTEGRITY STAR (MV) எனும் வணிகக் கப்பலில் இருந்த பணியாளர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்பொன்றிற்கமைய விரைவாக செயல்பட்ட இலங்கை கடற்படையினர், குறித்த கப்பலில் இருந்த பணியாளர்களை அக்டோபர் 25ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டெடுத்த நிலையில் இன்று (அக்டோபர் 26,) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் மேற்படி கப்பலின் பிரதான இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கப்பல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது.
இந்த அவசர நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் (MRCC) ஒருங்கிணைப்பில், தேடல் மற்றும் மீட்புப் பணிக்காக கடற்படையின் சமுதுர (SLNS SAMUDURA) கப்பல் அனுப்பபட்டது.
துரிதமாக செயற்பட்ட கடற்படையின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் விளைவாக, கப்பலில் இருந்த இந்தியா, துருக்கி மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களும் (14) பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில், அப்பிரதேசத்தில் இருந்த மற்றொரு வணிகக் கப்பலான MV MORNING GLORY யும் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவத் தயார் நிலையில் இருந்துள்ளது. இது கடல்சார் அவசரகால பதிலளிப்பு சர்வதேச ஒத்துழைப்புக்கான சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கடற்படை தலைமையகத்தில் இருந்து செயல்பட்டும் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், கடலில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு பிரதான பங்கை வகிக்கிறது. சர்வதேச கடல்சார் மரபுகளுக்கு அமைய நாட்டின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி, இந் நிலையம் இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு கடல் பகுதிக்குள் மட்டுமல்லாமல் அதற்கப்பாலும் சர்வதேச கடல் பிரதேசத்தில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதுடன் ஆபத்திலுள்ள கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கும் உதவியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.