மனித விற்பனைக்கு எதிரான தேசிய மூலோபாய செயல் திட்டம்
குறித்த பாராட்டு விழா மற்றும் பாடநெறி
நவம்பர் 08, 2025
மனித விற்பனையை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பங்காளர்களை கௌரவிக்கும் விழா, மற்றும் தேசிய மூலோபாய செயல் திட்டம் (NSAP) 2026–2030 க்கான பாடநெறி ஆகியவை நேற்று (நவம்பர் 7) கொழும்பு மெரியட் கோர்ட்யார்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகம் (UNODC) ஆகியவற்றின் பிரதிநிதிகள், மனித விற்பனைக்கு எதிர்àந தேசிய பணிக்குழுவின் (NAHTTF) சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது NAHTTF இன் தலைவரான, பாதுகாப்புச் செயலாளர் AVM துயகொந்தா (ஓய்வு) முக்கிய பங்குதாரர்களுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கி கௌரவித்தார். அத்துடன் மனிதர்கள் விற்பனையை எதிர்த்துப் போராடுவதில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.
இலங்கையில் மனிதர்கள் விற்பனையை எதிர்ப்பதிலும் தடுப்பதிலும் அனைத்து பங்காளி நிறுவனங்களின் அர்ப்பணிப்பு, மற்றும் கூட்டு முயற்சிகளை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார். வரவிருக்கும் தேசிய மூலோபாய செயல் திட்டத்தை (2026–2030) வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அரசு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களுக்கிடையேயான வலுவான கூட்டாண்மையின் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.