யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது
நவம்பர் 12, 2025யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
தேசிய நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு பிரதான அங்கமாக காணப்படும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுபடுத்துவதது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
எல்லை மீள் நிர்ணயத்தை இறுதி செய்தல், இழப்பீட்டுச் செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான நிலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
முக்கியமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு தங்கள் சொத்துக்களை மீண்டும் பயன்படுத்தவதை உறுதி செய்யும் வெளிப்படையான மற்றும் சமமான செயல்முறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பல சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.