வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) மூன்றாவது தடவையாக கூடியது

டிசம்பர் 15, 2025

சமீபத்திய இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) தனது மூன்றாவது கூட்டத்தை இன்று (டிசம்பர் 15) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) வளாகத்தில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் நடத்தியது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான இக்குழு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தில் (NDRSC) அமைந்த செயலகத்தின் ஊடாக செயல்பட்டு வருகிறது. சமீபத்திய இயற்கை அனர்த்தத்தின் பின்னர் பெறப்பட்டு வரும் அனைத்து வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறுப்புகளை இக்குழு மேற்கொள்கிறது. நிவாரணப் பொருட்களின் வருகை மற்றும் சரிபார்ப்பு, களஞ்சியப்படுத்தல், ஒதுக்கீடு, அனுப்புதல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே இறுதி கட்ட விநியோகம் வரை முழு நிவாரண விநியோகச் செயற்பாட்டையும் இக்குழு மேற்பார்வை செய்கிறது.

இன்று நடந்த கூட்டத்தின் போது, தற்போதைய நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம், செயல்படுத்தலில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களை பெறுதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. ஒருகொடவத்தை நிவாரண பொருள் களஞ்சியத்தின் நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் செயல்திறன், பொறுப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும், வருகைதரும் மற்றும் விநியோகிக்கப்படும் அனைத்து நிவாரணப் பொருட்களையும் நிகழ் நேரத்தில் கண்காணிக்க உதவும் வெளிநாட்டு உதவி கண்காணிப்பு செயல்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டன. வெளிப்படைத்தன்மை மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சுகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்நேர தகவல்களை புதுப்பிக்க வேண்டியதன் அவசியமும் நினைவூட்டப்பட்டது. நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தகவல்களை கோருதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்தல் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரமும் இக்குழுவிற்கு உண்டு இணைப்பது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தாமதமின்றி மற்றும் திறம்பட சென்றடைவதை உறுதிப்படுத்த நேரத்திற்கேற்ற ஒருங்கிணைப்பு, அறிக்கையிடல் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்கள், இலங்கை இராணுவம், பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.