விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கான ‘‘செனெஹச’’ உணர்வு பூங்காவை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் திறந்து வைத்தார்

டிசம்பர் 17, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (17 டிசம்பர்) 'செனெஹச' கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம் (SERRIC) வளாகத்தில் புனரமைக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா மற்றும் உணர்வு (Sensory) பூங்காவையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிரதி அமைச்சரை SERRIC மையத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் உபேந்திர கருணாரத்ன அன்புடன் வரவேற்றார்.

இந்த உணர்வு பூங்கா, பாதுகாப்பான மற்றும் தொடர்பாடல் அம்சங்களின் மூலம் ஐந்து உணர்வுகளையும் தூண்டுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் அறிவாற்றல், இயக்கத் திறன் மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய சிகிச்சை கருவியாக செயல்படும். இது முப்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்கும் பாதுகாப்பு அமைச்சின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

முப்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கு விசேட பராமரிப்பு மற்றும் கல்வி வழங்கும் SERRIC மையத்தில், இலங்கை விமானப்படையினால் புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய வசதி, குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் சிகிச்சை சேவைகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வின் போது, SERRIC பணியாளர்களின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டியதுடன், மையத்தின் முக்கிய பணிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் விமானப்படைத் தளபதி, ரணவரு சேவா அதிகார சபையின் தலைவர் மற்றும் SERRIC மையத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.