வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழு (HL-FRAC) வின் நான்காவது அமர்வு பாராளுமன்றத்தில் நடைபெற்றது
டிசம்பர் 20, 2025வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) நான்காவது அமர்வு, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
இக்குழுவின் பிரதான பொறுப்பாக, அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக பெறப்படும் வெளிநாட்டு உதவிகளை முறையாக பதிவு செய்தல், நிர்வகித்தல் மற்றும் திறம்பட விநியோகித்தல் ஆகும்.
இதன்போது, தரவு கையிருப்பு பதிவு (Inventory) அமைப்பின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் (NDRSC) களஞ்சியத்தின் பணியாளர் தேவைகள் மற்றும் முழு நிவாரண செயல்முறையையும் கண்காணிக்கக்கூடிய விரிவான உள்ளக கணக்கெடுப்பு திட்டம் அமைப்பது பற்றியும் குழு கலந்துரையாடியது.
ஒருகொடவத்தை நிவாரண களஞ்சியத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துதல் மற்றும் நிவாரண சேவைகளை நேரடி முறையில் (Real-time) கண்காணிப்பதன் அவசியம் குறித்தும் இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தாமதமின்றி, வெளிப்படையான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த அமர்வில் குழு உறுப்பினர்கள், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.