பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சியில் (WDS) பங்கேற்பு - 2026
பெப்ரவரி 11, 2026உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி - 2026 (World Defense Show - WDS 2026) நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
பெப்ரவரி 08 முதல் 12 வரை நடைபெறும் இந்த உலக பாதுகாப்புக் கண்காட்சி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான முன்னணி சர்வதேச மேடையாக அமைந்துள்ளது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் மட்ட அரசாங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, உயர்மட்ட மூலோபாய உரையாடல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் கண்காட்சியில் வான், நிலம், கடல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதே வேளையில், ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தீர்வுகளின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்கள், வணிக அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் இது ஊக்குவிக்கிறது.
தனது விஜயத்தின் போது, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) கண்காட்சி மண்டபங்களை பார்வையிட்டார். இதில் 89 நாடுகளைச் சேர்ந்த 1,486-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதுடன், பல அரசாங்க நிறுவனங்களும், முன்னணி தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன.
மேலும், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் பல உயர் மட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவத் தலைமைத்துவத்துடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்புகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடைமுறை வாய்ப்புகளை கண்டறிதல் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் என்பவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.