பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சவூதி பாதுகாப்புத் பிரதி அமைச்சருடன்
இருதரப்பு கலந்துரையாடல்

பெப்ரவரி 12, 2026

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்தின் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் இளவரசர் Abdulrahman bin Ayyaf Al-Muqrin ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு ஒன்று பெப்ரவரி 9 அன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி (World Defence Show – WDS) நிகழ்வில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கை–சவூதி அரேபியாவுக்கிடையிலான நட்புறவு மிக்க இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்தனர்.

முன்பு வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதிநிதிகள் குழு, எதிர்காலத்திலும் சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது. அத்துடன், இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையில் இராணுவப் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தல், தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அறிவுப் பகிர்வு முயற்சிகளை மேம்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கடல் துறை விழிப்புணர்வு (Maritime Domain Awareness) மற்றும் கடல் பாதுகாப்பின் மூலோபாய முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதுடன் போதைப்பொருள் கடத்தல், மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தல் போன்ற எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் தொடர்பான பரஸ்பர அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கவலை வெளிப்படுத்தியதுடன், அவற்றை திறம்பட எதிர்கொள்வதற்காக இருதரப்பு ஒருங்கிணைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் இணக்கம் தெரிவித்தனர்.

மேலும், ஆளற்ற விமானங்கள் (UAV), உளவுத்துறை அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு திறன்கள் உள்ளிட்ட புதிய பாதுகாப்புத் தொழிநுட்பங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பாதுகாப்புத் துறையில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பின்பற்றுவதின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுவன ரீதியில் உறுதிப்படுத்தும் நோக்கில், இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் அல்லது பணியாளர் நிலை பேச்சுவார்த்தைகள் (Staff Talks) நடத்துதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் குறித்த சாத்தியங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அனர்த்த நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பான விடயங்களும் இதன் போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, படையினர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அனர்த்த தயார்நிலை மற்றும் செயல்திறனை மேம்படுத்தல் தொடர்பான செயல்பாட்டு தேவைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்துவமும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.