பாராளுமன்ற வளாகத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்தல்
தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது

பெப்ரவரி 18, 2026

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (17 பெப்ரவரி) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம், குறித்த விடயத்தில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் உயர்மட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இலங்கை கடல் எல்லைக்குள் நடைபெறும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளையும், அதனுடன் தொடர்புடைய பிற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள், சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி, அடித்தள இழுவை வலை (bottom trawling) பயன்பாடு, அனுமதியின்றி வானொலி அலைவரிசைகளை பயன்படுத்தல், மேலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போர்வையில் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்பாடுகள் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடி மற்றும் அனுமதியற்ற சுழியோடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள கப்பல் கண்காணிப்பு அமைப்புகளை (Vessel Monitoring Systems – VMS) திட்டமிட்டு செயலிழக்கச் செய்யும் உள்நாட்டு கப்பல்களின் மீன்பிடி உரிமங்களை இடைநிறுத்துவது குறித்தும் இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், எதிர்கால சட்ட மீறல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை அமுல்படுத்தி நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்படை, பொலிஸ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அமுலாக்க மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டின் நீர்வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இக்கூட்டம் வலியுறுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.