--> -->

சந்தஹிரு சேய நிர்மாணப் பணியின் நிறைவு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஆராய்வு

ஜனவரி 24, 2021

சந்தஹிரு சேய நிர்மாணப் பணிகளை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகத்திலேயே நிறைவு செய்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து பங்குதாரர்களிடமும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமான  சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளின்  முன்னேற்றம் தொடர்பில் நேரில் ஆராயும் பொருட்டு அனுராதபுர சந்தஹிரு சேய வளாகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பினரும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு ஏற்ப நிறைவு செய்வதற்கு தேவையான முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார்.

புனித அரங்கு அமைத்தல், சதுர அறைக்கு மேல் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்தல், தூபியின் நீள் கோபுர அமைப்பு, தூபியின் மீது செதுக்குவதற்காக முன்மொழியப்பட்ட கல்வெட்டுகள், வேலைப்பாடுகள், சிற்பம் மற்றும் கலைப் பணிகள் என்பன தொடர்பாகவும் இதன் போது நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

கட்டுமானங்கள் நடைபெற்று வரும் இடத்திற்கு விஜயம் செய்த ஜெனரல் கமல் குணரத்ன, குவிமாடத்தில் செங்கற்களை வைத்தார்.

மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அகற்றுவதற்காக பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸார் ஆற்றிய உன்னத சேவைகளைப் பாராட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த தூபியின் நிர்மான பணிகள் முழுமை அடையும் போது அது இலங்கையின் நான்காவது பெரிய தாதுகோபுரமாக அமையும்.

முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நிர்மான  பணியான இந்த தாதுகோபுரம், 285 அடி உயரமும் 255 அடி அகலமும் கொண்டது.

இந்த விஜயத்தின் போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷனா பதிரன, இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணபக்கார, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், செயற்திட்ட அதிகாரிகள், கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடகலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.