--> -->

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு

பெப்ரவரி 23, 2021

பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிடிபனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்த உயர் மட்ட அதிகாரிகாரிகளை அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேணுகா ரோவேல் (ஓய்வு) வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, செலவு குறைந்த, புதுமையான தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பல்வேறு புதுமையான பொருட்கள் பாதுகாப்பு செயலாளரின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மேலும், குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் விரிவாக விளக்கமளித்தனர்.

இதற்கமைய, மனித மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை அவயவங்கள், ஆளில்லா இலகுரக விமான இயக்க அமைப்பு 'பிளக் ஸ்பை' வான்வழி கண்காணிப்பு கருவி, களமுனை பீரங்கி துப்பாக்கி சூடு பார்வையாளர் பயிற்சி சிமியுலேட்டர், அலைபேசி ஜாமர், பரசூட்ஸ் பயிற்சி சிமியுலேட்டர், ஆளில்லா விமானங்கள் மூலம் வான்வழி நில வரைபடமாக்கல், துப்பாக்கி மற்றும் சாரதி பயிற்சி சிமியுலேட்டர், சாரதி பயிற்சி சிமியுலேட்டர், லேசர் வழிநடத்தப்பட்ட ரொக்கட் மற்றும் ஏவுகணை அமைப்பு சிமியுலேட்டர் மற்றும் ட்ரோன் ஜாமர் ஆகிய அதிநவீன ஆராய்ச்சிப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

மேற்படி கண்டுபிடிப்புக்களை பார்வையிட்ட பாதுகாப்பு செயலாளர், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்.

நாட்டின் பிரதான ஆராய்ச்சி பிரிவான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளராக இருந்த போது அவரின் எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் செயற்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் தற்போது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த பெறுபேறுகளை அபிவிருத்தி செய்து வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது.

மேலும், இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்னவுடன் மேலதிக செயலாளர் (தேசிய பாதுகாப்பு) சமந்தா வீரசிங்க மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலைய அதிகாரிகள் உட்பட இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.