--> -->

வில்பத்து தேசியப் பூங்காவின் வடக்கே முசலி பிரதேச சபையின் கீழ் உள்ள குடியேற்றப் பிரதேச வனப்பகுதியின் சமீபத்திய அறிக்கை

மார்ச் 23, 2019

சுமார் 131,667.1 ஹெக்டேயர் பரப்பினைக் கொண்ட வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு வடக்கேயுள்ள முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில், “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் முஸ்லிம் குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக காணிகள் ஒதுக்கியமை தொடர்பில் சுற்றுச்சூழல் குழுக்களால் முன்வைக்கப்பட்ட புகார்கள், சம்பந்தப்பட்ட குடியேற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாகவும் கருத்தில் கொண்டு, அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது.

இதன்பிரகாரம், 2015 ஆம் ஆண்டு குடியேற்றம் தொடர்பான நகர்வுகளை கண்காணிக்கும் பொறுப்பு இலங்கை விமான படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் அவ் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதியில் இருந்து சுமார் 178 வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவ் வாராந்த வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் குடியேற்றங்களுக்காக அல்லது விவசாய நோக்கங்களுக்காக நில ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளதா என்பதை அவதானித்தனர்.

2015ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படையினரால் மரிச்சுக்கட்டி பகுதியில் காடழிப்பு நடவடிக்கை ஒன்று அவதானிக்கப்பட்டு, அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் காடழிப்பை முற்றாக தடுத்து நிறுத்தவும், மீள் நடுகை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது, இப்பகுதியில் இடம்பெறும் மனித தலையீடுகள் தொடர்பாக உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கைகளும் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், காட்டுத்தீ மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு என்பன தொடர்பாகவும் கண்காணிப்புகள் இடம்பெற்றன.

வனப்பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ், வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் உள்ளடங்காத மாவில்லு, வேப்பல், கரடிக்குளி, மரிட்சுக்கட்டி, விலாந்திக்குளம் மற்றும் பெரியமரிப்பு ஆகிய பிரதேசங்களை மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கையொப்பமிடப்பட்டது.

இலங்கை விமானப்படையின் வான்வழிக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அவதானிக்கும்போது மக்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலயத்தின் வடக்கே உள்ள முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களான மரிச்சுக்கட்டி, கல்லாறு மற்றும் முள்ளிக்குளம் ஆகிய பகுதிகள் தவிர்ந்த வேறு எந்த ஒரு பகுதியிலும் காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. இறுதியாக வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகள் 2019ம்ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.