--> -->

மன்னாரில் 2000 கிலோவிற்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூலை 02, 2021

மன்னார், அச்சங்குளம்,நறுவிலிக்குளம் மற்றும் சவுத் பார் பிரதேசங்களில் ஜூன் 29,30 மற்றும் ஜூலை 01ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 2021.4 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய, ஜூன் மாதம் 29 ஆம் திகதி அச்சங்குளம் பகுதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 601.1 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நறுவிலிக்குளம் பகுதியில் ஜூன் மாதம் 30ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரிதொரு தேடுதல் நடவடிக்கையின்போது கடற்கரை சூழலில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 642.7 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது,

மேலும், 777.6 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் நான்கு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (ஜூலை, 01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அச்சங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் அரிப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத் திணைக்களம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நறுவிலிக்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சவுத் பார் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது,

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த அனைத்து தேடுதல் நடவடிக்கைகளும் கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.