நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இராணுவம் விரிவாக்கம்

ஆகஸ்ட் 25, 2021
  • தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளிமிருந்து அமோக வரவேற்பு

யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் பயனாளிகளிமிருந்து அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளது.

நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயல்முறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, நுவரெலியா, மாத்தளை, கண்டி, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை, கொழும்பு புறநகர்ப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக  இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்துள்ள  அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணரான டாக்டர் உமாசுகி நடராஜா, யாழில்  முன்னெடுக்கப்படும் இராணுவத்தினரின்  நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்போது  மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமிமையினால் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு பெற உதவுவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ் தீபகற்பத்தில்  உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பிராந்திய அரச நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடமாடும்  தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு படையினரும் நடமாடும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கமைய முல்லைத்தீவை தளமாகக் கொண்ட மருத்துவப் படையினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோயாளிகள், அங்கவீனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் தடுப்பூசிகள் வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், தியத்தலாவை இராணுவத் தள வைத்தியசாலையின் மருத்துவப் படையினர், நுவரெலியா, மாத்தளை, கண்டி, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளை உள்ளடக்கிய 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயாளிகள், அங்கவீனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை  திங்கள்கிழமை முன்னெடுத்திருந்தனர்.