--> -->

பாதுகாப்பு செயலாளரினால் தீகவாபி விஹாரையில் பக்தர்களின் ஓய்வு மண்டப அறைக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது

ஒக்டோபர் 15, 2021
  •  நாட்டின் உயரமான மூன்றாவது தூபியின் புனரமைப்பு பணிகள்  விரைவுபடுத்தப்படும்

தீகவாபி ரஜமஹா விஹாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள  பக்தர்களின் ஓய்வு மண்டப அறைக்கான  அடிக்கல் இன்று (ஒக்டோபர், 15)  சுபவேளையில் பௌத்த சமய ஆராதணைகளின் பின்னர்  பாதுகாப்பு  செயலாளரும்,  தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள  தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான  ஜெனரல் கமல் குணரத்னவினால்  (ஓய்வு) நட்டிவைக்கப்பட்டது.

உத்தேச திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவாறு  மரங்களால் சூழப்பட்ட இரம்யமான  சூழலைக் கொண்ட  பக்தர்களுக்கான  ஓய்வு மண்டபம் (விஷ்ராம ஷாலா) இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துவம் மற்றும் ஆளணியைக் கொண்டு 2022ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது, தூபி வளாகத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள  அன்னதானசாலை, தாமரை பொய்கை, புனித தந்ததாது மனை, மர நடுகை மற்றும்    நிலப்பயன்பாடு என்பன  தொடர்பாகவும்  பாதுகாப்பு செயலாளர்  கேட்டறிந்து கொண்டார்.

துரித கதியில் இடம்பெற்றுவரும் நிர்மாணப்பணிகள் காரணமாக தூபி கட்டுமானம் இன்று வரை மூன்றாவது அடித்தள சுற்றுவட்டத்தை அண்மித்து சுமார் 17 அடி  உயரத்தை எட்டியுள்ளது
இதன்போது ஊடகங்களுக்கு பதிலளித்த ஜெனரல் குணரத்ன, வரலாற்று சிறப்புமிக்க இந்த தூபியின் முன்னைய  மகிமை இன்னும் 18 மாதங்களுக்குள் மீட்டெடுக்கப்படும் என்று உறுதியளித்த அதேவேளை, பண்டைய அரசர்களால் ஸ்தூபியை புதுப்பிக்க அவ்வப்போது தொடங்கப்பட்ட பல முயற்சிகளை நினைவுகூர்ந்தார். இந்த தூபி வழக்கத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்தும் இன்னும்  இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற  எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

" வரலாற்று சிறப்பு மிக்க இந்த தூபியின் நிர்மாணப்பணிகள்  நிறைவு பூர்த்தியானத்தின் பின்னர் , 275 அடி உயரம் கொண்ட நாட்டின் மூன்றாவது பெரிய தூபியாக காட்சியளிக்கும் " என்று அவர் மேலும் கூறினார்.

அத்தோடு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 'சந்தஹிரு சேய' தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட பின்னர் இதற்காக பயன்படுத்தப்பட்ட ஆளணி மற்றும் உபகரணங்கள் என்பன தீகவாபி தூபியின் புனர்நிர்மாணப்பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தூபியின் நிர்மாணப்பணிகளை  முடிவுக்குக் கொண்டு வருவதுடன், கற்களைக்கொண்டமைந்த நடைபாதை வளாகத்தை (சலபதல மலுவ) நிறைவு செய்வதற்கான திட்டங்களும் முன்னெடுக்கபடவுள்ளன என்றும் ஜெனரல் குணரத்ன கூறினார்.

தீகவாபி தூபியின் புனரமைப்பு பணிகள்,   இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புரவலர்கள் மற்றும் பக்தர்களின்  பங்களிப்புடன் தீகவாபிய அருண நிதியத்தின்  முன்னெடுக்கப்படவுள்ளதால் இதற்காக அரச  நிதி எதுவும் பயன்படுத்தப் படமாட்டாது.

தீகவாபி ரஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதி மகாஓய சோபித  தேரரின் வழிகாட்டுதல்களுடன் தீகவாபி தூபியின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

'தீகவாபி தூபி' புனரமைப்பு  திட்டத்திற்கு,  நாட்டின் பிரதமரும்,  புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார  அமைச்சருமான  கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால்  2020 நவம்பர்  11ம்  திகதி மங்களகரமான முறையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி மகாஓய சோபித  தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்கள்,  புத்த சாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர் பேராசிரியர் கபில குணவர்தன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீஎம்எல் பண்டாரநாயக்க, சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் லமா ஹேவகே (ஓய்வு), தொல்பொருள் திணைக்களத்தில் தொல்பொருளியல் சிரேஷ்ட  பேராசிரியர் அனுர மனதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல்  தினேஷ் நாணயக்கார பிராந்திய முப்படை அதிகாரிகள்,  கட்டிடக் கலைஞர்கள், தொல்பொருளியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.