--> -->

தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் கடற்படையினரால் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

டிசம்பர் 16, 2021

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 23 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர், 15) கையளிக்கப்பட்டது.

தலசீமியா இலங்கையில் மிகவும் பொதுவான மரபுவழி இரத்தக் கோளாறாகக் கருதப்படுகிறது. தலசீமியா நோயாளிகளுக்கு அடிக்கடி இரத்தமாற்றம் காரணமாக முக்கிய உறுப்புகளில் தேங்கும் அதிகப்படியான இரும்பு படிவுகளை அகற்ற இந்த சிகிச்சை கருவிகள் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் தயாரிக்கப்படும் தலசீமியா சிகிச்சை கருவிக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களது மாதாந்த சம்பளத்திலிருந்து பங்களிப்பு வழங்கிவருகின்றனர்.

இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் தலசீமியா நோய்க்கு சிகிச்சையளிக்கும் 23 கருவிகளை சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் கேஏடீடீவீஎல் குமாரப்பெலியிடம் கடற்படைத் தளபதி வைபவ ரீதியாக கையளித்தார்.

கடற்படை இதுவரை 2397 தலசீமியா சிகிச்சை கருவிகளை விநியோகித்துள்ள அதேவேளை, தேவை ஏற்படும்போது மீண்டும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தொடர்ந்து பொருட்களை உற்பத்தி செய்யும் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் பதில் கொள்கை மற்றும் திட்ட பணிப்பாளர் கெப்டன் நிமல் ரணசிங்க மற்றும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.