--> -->

இராணுவத்தினரால் அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனம் தயாரிப்பு

பெப்ரவரி 01, 2022

இலங்கை இராணுவம்,  டீசல் எரிபொருளில் இயங்கக்கூடிய ஆறு சிலிண்டர் எஞ்சின்கள் கொண்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனத்தை தயாரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வீரர்களினால் ஆக்கப்பூர்வ உற்பத்தித் திறனுக்காக புதிய ஆறுகொள்ளலவு டீசல் யூனிகோப்-எம்ஆர்ஏபி வாகனம், இராணுவத்தால் முன்பு பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட என்ஜின்கள், அகற்றப்பட்ட செசிஸ்கள் ஆகியவற்றினைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் தயாரிப்பு செலவு ரூ. 10 மில்லியன் ஆகும். இது இறக்குமதியுடன் செலவுடன் ஒப்பிடுகையில், ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த பெறுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட யூனிகோப்-எம்ஆர்ஏபி வாகனம், 9 போர் வீரர்களுக்கான திறன் , 12.7 மெஷின் கன் 4 x 4 ஆல் வீல் டிரைவ் கொண்ட அதிக வேகம், வாகனத்தில் பொருத்தப்பட்ட கெமராக்கள் கொண்ட நால் திசை கண்காணிப்பு திறன் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் கெமரா அமைப்பு மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்புடன் கூடிய சமகால கண்காணிப்புத் திறன்களைக் கட்டளையிடும் புலம், தொலைதூரத் தொடர்புத் திறன், உள்நாட்டில் கிடைக்கும் உதிரிபாகங்களுடன் குறைவான பராமரிப்புச் செலவுகள், குறைந்தளவான உற்பத்திசெலவு, குளிரூட்டப்பட்ட அரை உட்பட பல வசதிகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் தயாரிக்கப்பட்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு கொண்ட சர்வதேச தரத்திலான புதிய 'யுனிகோப்' வாகனமானது காட்சிப் படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதியும் மற்றும் இராணுவ வழங்கல் சேவை அணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த திட்டத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே முன்னிலையில் இராணுவத் தலைமையகத்தில் திங்கட்கிழமையன்று (ஜனவரி, 31) இந்த விஷேட வாகனம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அண்மைக் காலத்தில் இராணுவத்தின் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக யுனிபபல்ஸ் (Unibuffels) வாகனங்களை (யூனிகோனின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு) தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினர் ஏற்கனவே மாலி நாட்டுக்கு 65 க்கும் மேற்பட்ட வாகனங்களை அனுப்பி நாட்டின் பெருமளவான அந்நியச்செலாவனியை சேமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.