--> -->

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

மார்ச் 02, 2022

ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் 'யுரகா' மற்றும் 'ஹிராடோ' ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து ஜப்பானிய கடற்படை கப்பல்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கொமாண்டர் கோண்டோ கோஜியால் கட்டளையிடப்படும் 141 மீ நீளமுள்ள ‘யுரகா’ கப்பலில் 130 கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாகவும், லெப்டினன்ட் கொமாண்டர் ஐடிஓ அகிராவினால் கட்டளையிடப்படும் 67 மீட்டர் நீளமுள்ள ‘ஹிராடோ’ கப்பலில் 55 கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னர் இலங்கை கடற்படையின் சிந்துரால
கப்பலுடன் இணைந்து வெற்றிகரமான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் செயற்திட்ட பயிற்சிகள், போர் மூலோபாய பயிற்சிகளிலும் ஈடுப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகை தந்துள்ள கப்பல்கள் எதிர்வரும் 03 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளன. கப்பல்களின் விஜயத்தின் நடவடிக்கைகள் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நெறிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றதாக அது மேலும் தெரிவித்துள்ளது.