--> -->

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டம் ஆரம்பம்

மே 30, 2022
  • கோல்டன் பரடைஸ் வதிவிட விசா - இலங்கை தீவின் நீண்ட கால நன்மையை அனுபவிக்க வாய்ப்பு
  • கோல்டன் பரடைஸ் வதிவிட விசா - இலங்கையில் முதலீடு செய்ய, வாழ மற்றும் கல்விகற்க வசதி

இலங்கையில் முதலீடு செய்ய, வாழ மற்றும் கல்விகற்க வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தலைமையில் பத்தரமுல்லயிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று (மே 30) இடம்பெற்றது.

இதன்போது கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளமும் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

அங்குரார்ப்பன நிகழ்வு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் :- குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர மற்றும் அவரது பணியாளர்கள் மேற்படி வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க மேற்கொண்ட முயற்சியினைப் பாராட்டினார்.

செயல்முறைகள் எளிமையாக அமையும்போது, அது விண்ணப்பிக்க விரும்புபவர்களை கவரும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை சிக்கலற்றதாக இருக்கும்போது, அது மேலும் நம்பிக்கைக்குரியதாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் தனது உரையில், இந்தத் திட்டத்தை உரிய நேரத்தில் மதிப்பீடு செய்து, அவசியம் ஏற்படுமாயின் தேவையான மேம்பாடுகளைச் செய்யவும் நாம் எதிர்பார்க்கிறோம், என்றார்.

வெற்றிக்கான பாதை திறந்திருப்பதால், வெற்றியைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த திட்டம், முதலீட்டாளர்கள் இலங்கை தீவின் நன்மைகளை அனுபவிக்கும் அதே வேளையில் வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு பங்களித்து பலன்களைப் பெறுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நீண்ட கால குடியுரிமை விசா திட்டமாகும்,

இத்திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்ச்சியான நன்மைகளை அனுபவிப்பார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் யு. கே. பண்டார, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பணிப்பாளர் நாயகம் பிரியங்கா விஜேகுணசேகர, முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.