--> -->

விக்ரமரத்ன நந்துன் சிந்தக அல்லது ஹேரத் திஸாநாயக்ககே ரொஷான் இசங்க என்றழைக்கப்படும் ஹரக்கட்டாவை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் தெளிவுபடுத்தல்.

ஒக்டோபர் 07, 2022

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என;று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் கொழும்பில் உள்ள தேசிய மத்திய பணியகத்தினால் (இலங்கை இன்டர்போல்) 2022 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி விடுத்த சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பை அடுத்து குறித்த நபரை நாடுகடத்துவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதியிடப்பட்ட INT 281/21 என்ற இலக்கமுடைய கடிதமூலம் (பிப 3.00 மணியளவில்) சீஐடியினரால் பாதுகாப்பு அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய  மேற்படி நபர் தொடர்புடைய கடிதம் மற்றும் உத்தியோபூர்வ ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சின் சட்டப் பிரிவினரால் வெளிவிவகார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைக் கோரியிருந்தது.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி  சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த சந்தேக நபரை விடுவிக்க வேண்டாம் என துபாய் தகுதிகான்  அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்குமாறு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதன்படி, ஆவணங்கள் கிடைக்கப்பெற்று 24 மணித்தியாலத்துக்குல் (மறுநாளே) வெளிவிவகார அமைச்சிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட்டதனால் பாதுகாப்பு அமைச்சினால் ஆவணங்களை அனுப்புவதில் தாமதம்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது மேலும் வலியுறுத்தப்படுகிறது.

இத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்தவும், அவர்களை கைது செய்யவும்  தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை  சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுருத்துகிறது.

எனவே, சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை என்றும், இதுபோன்ற பிழையான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு பொது மக்களுக்கு அறிவிக்கின்றது.