--> -->

''ஒன்றாக எழுவோம்'' என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

ஒக்டோபர் 12, 2022

தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

"ஒன்றாக எழுவோம்" என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலிமுகத்திடலில் விமர்சையாகக் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார்.

சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, சைக்கிள் சவாரி, சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டப் போட்டிகள், வரலாற்று மற்றும் அரிய புத்தக கண்காட்சி ஆகியவை அவற்றில் முக்கிய அம்சங்களாகும்.

அதேபோன்று, சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் 2000 குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

பெப்ரவரி 04 மற்றும் 05 ஆம் திகதிகளில், தேசிய பூங்காக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்பட இருப்பதோடு 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக நினைவு தபால் தலையும் வெளியிடப்படவுள்ளது.

 சுதந்திர தின நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவானது 10 உப குழுக்களைக் கொண்டுள்ளதோடு, சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் பங்கேற்புடன் பல்வேறு கலாசார, சமய மற்றும் சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சிறந்த வீட்டுத்தோட்டம், சிறந்த கிராமப்புற மறுமலர்ச்சி மையம், சிறந்த மரம் நடுகை நிகழ்ச்சிகள் போன்ற பல கிராமப்புற நிகழ்ச்சிகள் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்த வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று நாடுபூராவும் உள்ள அனைத்து அரச நிறுவன கட்டிடங்களிலும் தேசியக் கொடியை காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர்,பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன , பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ,கொழும்பு நகரபிதா ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நன்றி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு